மேய்ச்சல் தரை விவகாரம்- பண்ணையாளர்களுக்கு தடை விதிக்காதிருக்க அரச தரப்புக்கு நீதிபதி பணிப்பு!
In ஆசிரியர் தெரிவு January 22, 2021 8:57 am GMT 0 Comments 2429 by : Litharsan
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேய்ச்சல் தரையினைப் பாவிப்பதைத் தடைசெய்யவேண்டாம் எனவும் பணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் 18ஆம் திகதி பண்ணையாளர்கள் சார்பில் மேய்ச்சல்தரை அபகரிப்புத் தொடர்பான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளும் மேய்ச்சல் தரையில் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, மேய்ச்சல் தரையில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
அத்துடன், மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யக் கூடாது எனவும் கோரப்பட்ட நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதாக அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டார். மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளை அறிவுறுத்துவதாக நீதிமன்றுக்கு வாக்குறுதியளித்தாார்.
இதனைவிட, தற்போது மேய்ச்சல் தரை அபகரிப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பகுதியைத் தவிர அப்பகுதியில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என்பதற்கும் அரச சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் தற்போது பிடிக்கப்பட்டுள்ள காணியை அவ்வாறே பேணுமாறும் வேறு எந்தச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடாது எனவும் பணிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் மார்ச் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.