மைத்திரியின் அரசியல் அழிவு ஆரம்பம்: சுமந்திரன் ஆவேசம்!
In ஆசிரியர் தெரிவு November 4, 2018 3:36 pm GMT 0 Comments 2780 by : Ravivarman
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோட நினைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் இறுதிக்காலம் ஆரம்பமாகிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில், அதாவது தமிழ் மக்களது வாக்குப் பலத்தில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கூட்டமைப்பைக் கூறுபோட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இது அவரது அரசியல் வாழ்வின் அழிவின் ஆரம்பமாகும். இதனை நாம் பகிரங்கமாகவே அறிவிக்கின்றோம். எமது உப்பினைத் தின்று எமது கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவரை அமைச்சராக ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.
இவ்வாறான மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒருபோதுமே எமது ஆதரவு இருக்காது. எமது மக்களைக் கூறுபோடுவதற்காக மைத்திரிபால சிறிசேனவை நாம் ஜனாதிபதி ஆக்கவில்லை.
தேர்தலில் தோற்றிருந்தால் ஆறடி நிலத்திற்குள் போயிருப்பேன் எனக்கூறிய சிறிசேனவைக் காப்பாற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லவா?
இன்று எங்களையே பிரித்துப்போடும் சூழ்ச்சி செய்யும் கபட நாடகமாடும் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மாறியிருக்கின்றார். அது அவரது அழிவிற்கான ஆரம்பம்” என அவர் மிகவும் ஆவேசமாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.