மோடியின் ஜாதி எதுவென்றே தெரியாது – பிரியங்கா
In இந்தியா April 28, 2019 2:29 pm GMT 0 Comments 2271 by : Jeyachandran Vithushan

தனக்கு மோடியின் ஜாதி எதுவென்றே தெரியாது என்று உத்தர பிரதேச காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா வதேரா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவரும், சகோதரருமான ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிரசாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நமது நாட்டின் பிரச்னைகள் மிகத் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மிகவும் பின்தங்கியுள்ளது.
தேசியவாதம் என்பது மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டும். ஆனால், பாஜக அரசு மக்களின் பிரச்னைகளை என்றும் கேட்டதில்லை.
அதையும் மீறி மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து போராடினால், அவர்களை இந்த அரசு ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனவே இது ஜனநாகமும் கிடையாது. இதில் தேசியவாதமும் இல்லை.
பணம், புடவை மற்றும் காலணி உள்ளிட்டவைகளை பாஜக வேண்டுமென்றே ஊடகத்தின் முன் மக்களுக்கு வழங்கி தேர்தலை சந்திக்கிறது. நான் இங்கு 12 வயதிலிருந்து வருகிறேன். எங்கள் தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலி மக்கள் பெருமைக்குரியவர்களாகவே இருந்து வருகின்றனர்.
எனவே அமேதி தொகுதி மக்கள் என்றும், யாரிடமும் பிச்சை கேட்டது இல்லை.
காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் மக்களின் வளர்ச்சி தொடர்பாக மட்டுமே எதிர்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், பிரதமர் மோடி குறித்து எந்தவொரு தனிப்பட்ட விமர்சனங்களும் செய்ததில்லை. எனக்கு இன்று வரை பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதி எதுவென்று கூட தெரியாது” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.