மோடி தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக்கொள்ள வேண்டும் – தயாநிதி மாறன்
In இந்தியா February 11, 2021 5:15 am GMT 0 Comments 1194 by : Krushnamoorthy Dushanthini

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
மத்திய வரவு செலவு குறித்த விவாதம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள கொரோனா தடுப்பூசி மீது பலருக்கும் நம்பிக்கையில்லை. ஆதலால், மக்களுக்கு ஏற்படும்வகையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் போட்டுக்கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி மட்டுமல்லாது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு மக்கள் பார்க்கும் வகையில் இவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், இந்தத் தடுப்பூசி மீதான அச்சம் விலகி, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அந்தத் தடுப்பூசியின் செயல்திறன் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.
அதேபோல பிரித்தானிய இளவரசர் பிலிப், பிரதமரின் நல்ல நண்பரான இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.