யாப்பு சீர் திருத்த நிபுணர் குழுவின் செயற்பாடுகள் திருப்திகரமாகவுள்ளது – விஜேசந்திரன்
In இலங்கை February 24, 2021 5:13 am GMT 0 Comments 1118 by : Vithushagan

இலங்கை அரசியல் யாப்பு திருத்தத்தில் யோசனைகளை பெற்றுக் கொள்கின்ற நிபுணர் குழுவின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமைந்துள்ளது என பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சங்கரன் விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று ( புதன்கிழமை) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நாங்கள் அண்மையில் மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் அரசியல் யாப்பு நிபுணர் குழுவை சந்தித்து எங்களுடைய யோசனைகளை முன்வைத்துள்ளோம்.இதன்போது மிகவும் ஆர்வத்துடனும் அக்கறையோடும் அவர்கள் எங்களுடைய முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பாக விளக்கங்களை கேட்டறிந்து கொண்டனர்.
நாங்கள் முன்வைத்துள்ள அநேகமான யோசனைகள் புதிய விடயங்கள் எனவும் இது தொடர்பாக இன்னும் அதிகமான விளக்கங்கள் தேவைப்படுவதாகவும் எனவே மீண்டும் ஒரு முறை எங்களுடைய குழுவினரை சந்திக்க நேரம் ஒதுக்கி தருவதாகவும் முழுமையான தகவல்களை இதன்போது தங்களுக்கு பெற்றுத் தருமாறும் அவர்கள் எங்களுடைய தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனிடம் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு அமைய எங்களுடைய தலைவரின் பணிப்புரைக்கு அமைவாக எனது தலைமையில் மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவில் மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ் உப தலைவர் சிவலிங்கம் சதீஸ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாங்கள் ஒரு குழவாக செயற்பட்டு இன்னும் பல தகவல்களை அரசியல் யாப்பு சீர்திருத்த நிபுணர் குழுவிடம் கையளிக்கவுள்ளோம்.
அந்த வகையில் எங்களை பொறுத்த அளவில் நாங்கள் எங்களுடைய யோசனைகளில் தனியே மலையக மக்களைப்பற்றி மாத்திரம் யோசனைகளை முன்வைக்காது குறிப்பாக இலங்கையில் வாழுகின்ற சிறுபான்மை மக்களாகிய மலையக தமிழர்கள் வடகிழக்கு தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று தரப்பினருடைய விடயங்கள் தொடர்பாக நாங்கள் யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
மலையக மக்கள் முன்னணியை பொறுத்த அளவில் நாங்கள் 89 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் அமரர் சந்திரசேகரனுடன் இணைந்து இந்த கட்சியை ஆரம்பித்த பொழுது நாங்கள் இலங்கையிலே இருக்கின்ற அனைவருடைய குறிப்பாக சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற என்னத்துடனேயே நாங்கள் செயற்பட்டு வந்தோம்.இதன் காரணமாக பலமுறை எங்களுடைய கட்சியை சார்ந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.
ஆனாலும் நாங்கள் எங்களுடைய கொள்கையில் இருந்து என்றுமே தடம் புரண்டது இல்லை.அதே நேரம் ஒன்றினைந்த இலங்கைக்குள் மலையக எமது தாயகம் நாம் ஒரு தேசியம் என்ற கொள்கையையும் ஒரு நாளும் விட்டுக் கொடுக்கமாட்டோம்.இன்று எங்களுடைய தலைவர் இராதாகிருஸ்ணன் மாத்திரமே மலையகத்தில் அரசியல் ரீதியாக அனுபவம் வாய்ந்த ஒரு தலைவராக இருக்கின்றார்.
ஏனைய தலைவர்களை நான் குறையாக கூறவில்லை.ஆனாலும் அனுபவ ரீதியாக எங்களுடைய தலைவர் முன்னாள் இருக்கின்றார்.மேலும் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும்.அதற்கு தற்பொழுது அரசாங்கம் அமைத்துள்ள அரசியல் நிபுணர் குழுவை சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது என்னமாகும்.
எனவே இந்த அரசியல் நிபுணர் குழுவிற்கு எங்களைப்போன்று இன்னும் மலையகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் மலையக பெண்கள் என அனைத்த தரப்பினரும் தங்களுடைய யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்ற விடயத்தையும் நான் எதிர்பார்க்கின்றேன்.
இந்த அரசியல் சீர் திருத்த நிபுணர் குழு சிறுபான்மை சமூகம் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது.இந்த பரிந்துரைகள் அனைத்தும் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.இதுவும் நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் யாப்பு சீர் திருத்தம் போல அமைந்து விடக்கூடாது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.