யாழில் தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடல்
In இலங்கை February 2, 2021 4:23 am GMT 0 Comments 1440 by : Dhackshala

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக யாழ். மாநகர முதல்வருக்கும் தொல்பொருள் திணைக்களத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது, தமது வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கு ஏதுவான வகையிலும் தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள மரபுரிமைச் சின்னங்களை தாமே பாதுகாக்கும் நோக்குடனும் மரபுரிமைச்சின்னங்களை பாதுகாக்கின்ற பராமரிக்கின்ற பொறுப்பினை தமக்கு வழங்கவேண்டும் என்று முதல்வர் தொல்பொருள் திணைக்களத்தினரிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் குறித்த மரபுரிமைச் சின்னங்களை முழுமையாக கையளிக்காதுவிடினும் ஒப்பந்த அடிப்படையில் குறித்த மரபுரிமைச் சினைங்களை பாதுகாக்கின்ற உரிமையை மாநகர சபைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதில் அளித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி இது தொடர்பாக கோரிக்கை கடிதம் ஒன்றினை தருமாறும் அதற்குரிய அனுமதிக்கு முயற்சிப்பதாகவும் கூறினார்.
முக்கியமாக சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோப்பு மற்றும் வளைவு, யமுனா ஏரி ஆகிய தமிழர் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாத்து பாராமரிப்பது தொடர்பாக யாழ். மாநகர சபையும் தொல்பொருள் திணைக்களமும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.
அத்துடன் குறித்த இடங்களில் அந்த மரபுரிமைச் சின்னங்களின் வரலாற்றினை மூன்று மொழிகளிலும் இடுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டு முடிவுசெய்யப்பட்டது.
இக்கலந்துரையாடலுக்கு பின்னர் தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர் யாழ். கோட்டை, யமுனாஏரி, சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோப்பு ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ். கோட்டைப் பகுதியைச் சுற்றிய வெளிப்பகுதி குறிப்பாக முத்தவெளி பகுதியில் வளர்ந்திருக்கின்ற செடிகள் மற்றும் புற்களை அகற்றி குறித்த பகுதியை யாழ். மாநகர சபையும் தொல் பொருள் திணைக்களமும் இணைந்து தூய்மைப்படுத்துவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.