யாழில் மீண்டும் முடக்க நிலையினை ஏற்படுத்த இடமளிக்க கூடாது- மகேசன்
In இலங்கை February 20, 2021 8:07 am GMT 0 Comments 1242 by : Yuganthini
யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது. அதேசமயம் 190 பேர், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
இந்த நிலைமையில் யாழ்.மாவட்டத்தில் 258 குடும்பங்களைச் சேர்ந்த 610பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். யாழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதாரப் பகுதியினருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முடிவடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏனைய பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்குரிய பூர்வாங்க வேலைத் திட்டங்கள் அனைத்தும், சுகாதார பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைத்தவுடன் மிக விரைவாக பொதுமக்களுக்கு செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன
மேலும், மாவட்ட செயலகம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அதற்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்கள்.தற்பொழுது மாவட்டத்தில் இயல்பு நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பி உள்ளன. இருந்தபோதிலும் சுகாதார அமைச்சினுடைய அறிவுறுத்தல்களின் பிரகாரம் சுகாதார வழிமுறைகள் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியமாக இருக்கின்றது
ஏனென்றால் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்ற இயல்புநிலை மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
அந்த வகையிலே தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியான எழுமாறான பி.சி.ஆர்.பரிசோதனைகளும் பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வியாபாரிகள், சந்தைகள், மக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களிடம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
மேலும் கடந்தகால அவதானிப்புகளின்படி, வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் ஊடாக தொற்று இங்கே பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்களையும் பாதுகாத்து, தங்களுடைய சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தாங்களாக முன்வந்து தங்களுடைய தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுத்தல் சிறந்தது.
அத்தோடு ஏனையவர்களோடு பழகுவதையும் தவிர்த்துக் கொள்வது மிகவும் பெரும் உதவியாக இருக்கும். அதேநேரத்தில் அவர்களுக்கு சட்டத்திலே கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு இடம் இல்லை. இருந்தபோதிலும் அவர்கள் சுய கட்டுப்பாடுடன் இருந்தால் அவர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் சமூகத்தையும் அவர் பாதுகாப்பதற்குரிய ஏதுவான காரணியாக இருக்கும்
மேலும் தற்பொழுது மக்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகள், விவசாய மீன்பிடி கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பதற்கு பொதுமக்களுடைய பூரண ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தற்பொழுது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்ற புதிய வைரஸ், வேகமாக பரவக்கூடியதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே அபாய எச்சரிக்கையை மனதில் இருத்தி பொதுமக்கள் தங்களுடைய அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்தல் மிகவும் அவசியமானதாகும்.பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பேணுவதன் மூலம் எமது மாவட்டத்தில் மேலும் கொரோனா கொத்தணி உருவாகாது தடுக்க முடியும்.
அத்தோடு பொதுமக்கள் மீண்டும் ஒரு முடக்கல் நிலைக்கு எமது மாவட்டத்தை இட்டு செல்லாது பாதுகாத்தல் அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.