யாழ்ப்பாணம், கிளிநொச்சி பாடசாலைகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம் தரம் ஆறு தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 23ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வருகின்றன.
எனினும், கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் சுகாதாரத் துறையின் ஆலோசனைக்கு அமைய அந்த மாவட்டப் பாடசாலைகள் நவம்பர் 24ஆம் திகதி தொடக்கம் மூடப்பட்டன.
இதேவேளை, வடமாகாணத்தில் கடந்த டிசெம்பர் இரண்டாம் திகதி ஏற்பட்ட புரேவி புயல் காரணமாக நவம்பர் மூன்று மற்றும் நான்காம் திகதிகளில் மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் ஆளுநரின் அறிவிப்புக்கு அமைய விடுமுறை வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்கள் அதிகளவு மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இன்று திங்கட்கிழமையும் இரண்டு மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பாடசாலைகள் நாளை இடம்பெறும் என மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் கேட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.