யாழ்.திருநெல்வேலியில் 8 வியாபார நிறுவனங்களை மீளத் திறக்க அனுமதி
In இலங்கை November 30, 2020 8:04 am GMT 0 Comments 1428 by : Yuganthini

யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று (திங்கட்கிழமை) தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவர் பாலமுரளி இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தவிர்ந்த வேறு பணியாளர்களை கடமைக்கு அமர்த்தி, மீளத்திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் கடந்த சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாட்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை அவரது மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனையடுத்து, யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் அமைந்துள்ள இரண்டு தனியார் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு மூடப்பட்டன.
அந்த நபர் வருகை தந்தபோது கடமையிலிருந்த அனைவரும் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் நகரில் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனம், இரண்டு புடவையகங்கள், புத்தகக் கடை, கராஜ், வெதுப்பகம் உள்ளிட்டவைகளும் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் மூடப்பட்டன.
இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களுக்கு, காரைநகர் வாசி சென்றபோது கடமையிலிருந்த 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தவிர்த்து, ஏனையவர்களை கடமைக்கு அமர்த்தி மூடப்பட்ட நிறுவனங்களை இன்று தொடக்கம் திறக்க அனுமதிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரத்தில் இன்றைய தினம் 33 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.