யாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மருத்துவ அறிக்கைத் தகவல்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சட்ட மருத்துவ அறிக்கைத் தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டு இதயத்தைத் தாக்கியுள்ளது என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், உயிரிழந்த இளைஞனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தவிட்டார்.
அதனடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் இளைஞனின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.