யாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வான் ஒன்றில் சென்று வந்துள்ளார்.
அவர் கொழும்பிலிருந்து வருகை தந்தமை அறிவிக்கப்படாத நிலையில் கடந்த 15ஆம் திகதி சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவரைத் சுயதனிமைப்படுத்தினார்கள். அவருடன் வீட்டில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், அவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 121 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவர்களில், காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் இரண்டு கடற்படையினருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
ஏனையோருக்கு தொற்று இல்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.