யாழ். மாணவர்கள் கைது: சட்டமா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாக சுமந்திரன் அறிவிப்பு – UPDATE
In ஆசிரியர் தெரிவு May 3, 2019 11:35 am GMT 0 Comments 4389 by : Dhackshala
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோரின் விடுதலை தொடர்பாக கொழும்பு சென்று சட்டமா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த இரு மாணவர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிக்கும் அதிகாரம் நீதவானுக்கு இல்லை. ஆகையால் சட்டமா அதிபரை சந்தித்து அவரது இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
சட்டா அதிபரின் இணக்கப்பாடு கிடைக்கும்வரை குறித்த மாணவர்கள் விளக்கமறியலில் இருக்கவேண்டிவரும் என்றும் கூறினார்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தை சோதனையிடுமாறு பல்கலைக்கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாகவே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதென சுமந்திரன் குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடத்தப்பட்ட இந்த தேடுதலில் பல்கலை வளாகத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் ஒளிப்படங்கள், தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் மீட்கப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலை மாணவர்களை சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார் – Update
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் நேரில் சென்று பாா்வையிட்டுள்ளனா்.
யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் இராணுவம், பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப்படையினா் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய ஒளிப்படம் மற்றும் மாவீரா்களுடைய ஒளிப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினா்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோா் பொலிஸ் உயா் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் கைது செய்யப்பட்ட மாணவா்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட மாணவா்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குறித்த இருவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலையில் தொடர்கிறது தேடுதல் – தலைவர், செயலாளர் கைது! – Update
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலை வளாகத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் ஒளிப்படங்கள், தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் மீட்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவா் விடுதி ஆகியன இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய கட்டடம் மற்றும் பல்கலைக்கழக மாணவா் விடுதி ஆகியன கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மாணவா் ஒன்றிய கட்டடம் மற்றும் மாணவா் விடுதி ஆகியவற்றுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் போராளிகளின் ஒளிப்படங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. இதனடிப்படையில் பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் தேடுதல் வேட்டை – பதற்றத்தில் மாணவர்கள்!
யாழ். பல்கலைக்கழகத்தில் இரானுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாரிய சோதனைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இத் தேடுதல் நடவடிக்கையின்போது செய்தி கேரிப்பதற்கு பல்கலைக்கழகத்திற்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலையே இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.
இதில் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் உள்ளிட்ட அனைத்து பீடங்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ விடுதி உள்ளிட்ட பல்கலைக்கழக விடுதிகள் அனைத்தும் சுற்றி வைளக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோன்று கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவத்துறையும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பல்கலைக்கழகம் முற்று முழுதாக சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுவதால் பணிகளுக்கு வந்த பலரும் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.