யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தது முன்னணி!
யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டைத் தவிர வேறு ஒருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தினால் ஆதரிக்கத் தயாரென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அத்தோடு, நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய வேட்பாளரை நியமித்தால் அவரையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை முதல்வருக்கு இ.ஆர்னோல்ட்டை தவிர இன்னொருவரையும், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு தியாகமூர்த்தி தவிர்ந்த இன்னொருவரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக அறிவித்தால் அவர்களை ஆதரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராக இருக்கிறது.
அதேநேரம், இரண்டு சபைகளிலும் பதவி விலகிய ஆர்னோல்ட், தியாகமூர்த்தி இருவரையுமே வேட்பாளர்களாக நிறுத்தினால் எமது கட்சி அவர்களை எதிர்க்கும்.
அதேநேரம், எமது எதிர்ப்பையும் மீறி அவர்கள் வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும் அவர்கள் சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்தையும் எதிர்ப்போம்.
இதன்மூலம், இரண்டு சபைகளும் கலையும் நிலைமை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.