ரஞ்சன் ராமநாயக்கவை சபை அமர்வுக்கு அழைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்- சஜித் எச்சரிக்கை
In இலங்கை January 19, 2021 8:13 am GMT 0 Comments 1499 by : Yuganthini
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைக்கவில்லை என்றால் ஜனநாயக வழிகளிலும் போராட நாம் தயாராகவே இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கிடைத்துள்ள சிறைத்தண்டனையை அடுத்து, அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தற்போது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை 6 மாதங்களுக்கு இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. நாம் இதுதொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளோம்.
அதாவது அரசமைப்பின் 66, 89, 91, 105 ஆவது அரசமைப்புக்கு இணங்க, அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாகாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், அதற்கெதிராக அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராட நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிலையில், அவரை ஏன் நாடாளுமன்றுக்கு இன்று அழைக்கவில்லை என சபாநாயகரிடம் நான் கேட்க விரும்புகிறேன். அவர் சிறந்த ஒரு அரசியல்வாதி. பொய், ஊழல், இனவாதம் அற்ற ஒரு அரசியல்வாதி. அவர் மக்களின் மனங்களை வென்றவர்.
இப்படியான ஒருவரை ஏன் இன்று நாடாளுமன்றுக்கு அழைக்கவில்லை என்பதற்கு பதில் கோருகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.