ரஷ்யாவின் செயற்பாட்டால் விரக்தியில் உலக நாடுகள்: பொரிஸ் ஜோன்ஸன்
In இங்கிலாந்து March 27, 2018 6:30 am GMT 0 Comments 1515 by : Varshini
ரஷ்யாவின் முன்னாள் உளவாளியொருவர் மற்றும் அவரது மகளுக்கு நஞ்சூட்டப்பட்ட விடயமானது, சர்வதேச ரீதியில் மொஸ்கோ மீது விரக்தியை ஏற்படுத்தியுள்ளதென பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் நஞ்சூட்டப்பட்ட நிலையில், அண்மையில் பிரித்தானியாவின் சலிஸ்பரி பகுதியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள ஜோன்ஸன், இவ்விடயமானது ரஷ்யாவிற்கு ராஜதந்திர ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செயலின் தாக்கத்தை ரஷ்யா உணர்வதோடு, தமது எதிர்மறையான செயற்பாடுகளை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ரஷ்ய மக்களுடன் பிரித்தானியாவுக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லையென குறிப்பிட்ட பொரிஸ் ஜோன்ஸன், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அரசாங்கத்தின் மீதே அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் உளவாளிக்கு நஞ்சூட்டப்பட்ட விவகாரம் உலக நாடுகளில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இவ்விடயத்தைத் தொடர்ந்து, தனது நாட்டிலுள்ள 60 ராஜதந்திரிகளை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. அத்தோடு, கனடா மற்றும் 20 ஐரோப்பிய நாடுகளிலுள்ள 50இற்கும் அதிகமான ராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.
பிரித்தானியாவிலிருந்து 23 ரஷ்ய ராஜதந்திரிகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும், நஞ்சூட்டப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.