ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது!

தனது கைதுக்கு எதிராக ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பரோல் விதிமுறை மீறல் வழக்கில் தன்னை பொலிஸார் கைது செய்துள்ளதை எதிர்த்து, மாஸ்கோ பிராந்திய நீதிமன்றத்தில் நவால்னி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததது.
அதில், நச்சுத் தாக்குதல் பாதிப்புக்காக ஜேர்மனியில் நவால்னி சிகிச்சை பெற்று வந்ததால் நவால்னி பரோல் விதிமுறைகளின்படி அதிகாரிகள் முன் கையெழுத்திட முடியவில்லை என்று வழக்குரைஞர்கள் விளக்கமளித்திருந்தனர். எனினும், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே நவால்னி ஆதரவு தலைவர்கள் பலரை பொலிஸார் கைது செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் நச்சுத்தாக்குதலால் கோமா நிலைக்குச் சென்று, ஜேர்மனியில் சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்த நவால்னி, கடந்த 17ஆம் திகதி ரஷ்யா திரும்பினார். மாஸ்கோ விமான நிலையம் வந்தடைந்த அவரை, மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் பொலிஸார் கைது செய்தனர்..
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், நவால்னியை விடுவிக்கக் கோரியும் ஜனாதிபதி புடின் பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுவதும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டன. மூவாயிரத்துக்கும் மேலான போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.