வடகொரியாவில் பவி புயலால் எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவு பாதிப்பு: கள ஆய்வில் கிம்!

வடகொரியாவில் பவி புயலால் எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவு பாதிப்புகளே ஏற்பட்டுள்ளது என்று வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியதாக மாநில செய்தி ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
தலைநகர் பியோங்யாங்க் அருகே பவி புயல் கரையை கடந்த நிலையில், கனமழை மற்றும் சூறாவளிக்காற்றால் பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. நிலச்சரிவு ஏற்பட்டன. எனினும், பெரிதளவான சேதங்கள் பதிவாகவில்லை.
தெற்கு ஹ்வாங்கே மாகாணம் நாட்டிற்கான விவசாய மற்றும் மீன்பிடி தொழிலின் முக்கிய இடமாகும். இந்த நிலையில், தென் ஹ்வாங்கே மாகாணத்தில் கிம் ஜோங் உன், புயல் சேதம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு பதிவான சேதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துக் கொண்டார். அத்துடன், உயிரிழப்பு மற்றும் பயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை அவர் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பவி’ சூறாவளி ஆகியவற்றால் ஏற்படக்கூடும் அபாயங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுமாறு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அந்நாட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.