வடக்கில் தொகை மதிப்பு குறித்த கருத்தரங்கு நிறைவு
2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான தொகை மதிப்பு முறைகள் தொடர்பான கருத்தரங்கு கிளிநொச்சியில் நிறைவு செய்யப்பட்டது.
புள்ளி விபரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த செயலமர்வு நேற்று முன்தினம் ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெற்றது. பயிற்சியின் நிறைவு நாளான இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண இணைப்பாளர் உதயகுமாரி மகேஸ்வரன், மாவட்ட இணைப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய குறித்த செயலமர்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனை மண்டபத்தில் பயிற்சி வகுப்புக்கள் இடம்பெற்றன.
கடந்த காலங்களில் எழுத்து வடிவில் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இம்முறை ‘கப்பி’ எனும் நவீன தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் போன்று 2021ஆம் ஆண்டு தொகை மதிப்பீட்டுப் புள்ளி விபரமானது வேகமாகவும், நவீன முறையிலும் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 ஆண்டுகளிற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் தொகை மதிப்பீடானது எதிர்வரும் 2021ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளது. யுத்தம் காரணமாக 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய தொகை மதிப்பீடானது 2012ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் தொகை மதிப்பு காலத்திற்கமைவாக வரும் ஆண்டு நவீன முறையில் தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு விரைவான விபரத் திரட்டலை வெளியிடுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதற்கான உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் வடக்கு மாகாணம் தழுவிய பயிற்சி வகுப்புக்கள் மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் கொழும்பில் இடம்பெற்ற இவ்வாறான பயிற்சிகள் இம்முறை அவ்வந்த மாகாணங்களில் நடைபெற்று வருகின்றன. பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்கள் எதிர்வரும் வாரத்தில் நவீன தொழில்நுட்ப முறையிலான மாதிரி தொகை மதிப்பீடு ஒன்றினை மேற்கொள்ள உள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.