வடக்கு- கிழக்கு மாணவர்கள் தமிழ் மண்ணின் விருத்திக்கு வித்திட வேண்டும்: சி.வி.

பாரம்பரிய கல்வித்திறனை நோக்கி மீண்டும் தமது பயணத்தை ஆரம்பித்துள்ள வடக்கு- கிழக்கு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி தமிழ் மண்ணின் விருத்திக்கு வித்திட வேண்டும் என, வட. மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உயர்த்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வடக்கு- கிழக்கு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”வட மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதரத்தின் உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
வட கிழக்கின் கல்வி நிலை அண்மைய காலங்களில் சற்று தடுமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது. மீண்டும் எமது மாணவ மாணவியர் எமது பாரம்பரிய கல்வித்திறனை நோக்கிப் பயணிப்பதைக் கண்டு நாம் யாவரும் மகிழ்வடைகின்றோம்.
முக்கியமாக சித்திபெற்ற கிராமப்புற மாணவ மாணவியர்களை நாங்கள் விசேடமாக வாழ்த்துகின்றோம். காரணம் பல பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்பக் கஷ்டங்கள் மத்தியில் வைராக்கியத்துடன் அவர்கள் படித்து முன்னேறியுள்ளார்கள். நகர்ப்புற வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அடைந்த வெற்றிகள் எம்மைப் பெருமையடைய வைக்கின்றது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகன் அக்கிராமத்தில் இருந்து முதன் முதலாக வைத்தியத் துறையினுள் நுழைகின்றார் என்பது ஒரு சாதாரண விடயமல்ல. அவரை நாம் வாழ்த்துகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.