வடக்கு மக்களை மீண்டும் வன்முறையை நோக்கி செல்லவிடமாட்டோம்: அநுரகுமார திசாநாயக்க
In இலங்கை August 13, 2018 6:59 am GMT 0 Comments 1741 by : Yuganthini

வடக்கு மாகாணத்திலுள்ள மக்களை மீண்டும் வன்முறைக்கு செல்வதற்கு அனுமதிக்கமாட்டோமென, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருவிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“பிரதமர் ரணில் மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டின் நலன்கள் தொடர்பாக பேசுவதற்கு எந்ததொரு தகுதியும் அற்றவர்கள் ஆவர்.
மேலும் 70 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றினால் எந்ததொரு பாரிய அபிவிருத்தியும் இடம்பெறவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் ரணில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இன்னும் 32 வருடங்களை தாருங்களென கேட்கிறார். ஆனால் இந்த 32 வருடங்களில் அவர் உயிரோடு இருப்பாரா என்பதே சந்தேகமாகும்.
இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் அவரும் பாரிய மாற்றங்களை பெரிதாக ஏற்படுத்தவில்லை. அவரும் தற்போது 5 வருடங்களை தாருங்கள் என்கிறார்.
உண்மையில் நாட்டை ஆட்சி செய்த இவ்விரு கட்சிகளுக்கும் நாட்டுக்கு அவசியமானது என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
இதேவேளை எமது கட்சியிடம் சில அரசியல் புத்திஜீவிகள் நாட்டை எவ்வாறான துறைகளின் வாயிலாக அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் நாட்டில் கட்டங்களை உயர்த்துவதில் மாத்திரம் அபிவிருத்தி ஏற்படுவதில்லை. மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் செயற்பாட்டின் ஊடாகவே அபிவிருத்தி மேற்கொள்ள முடியும்” என அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.