வடமராட்சியில் நினைவேந்தலுக்கு தடை கோரிய விண்ணப்பங்களை பொலிஸார் மீளப்பெற்றனர்
In இலங்கை November 23, 2020 9:09 am GMT 0 Comments 1594 by : Dhackshala

பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டன.
இலங்கை குற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டன.
எதிர் மனுதாரர்களாக நினைவேந்தலை நடத்தும் ஒவ்வோருவர் உட்பட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டன.
இந்த விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, இன்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) விண்ணப்பங்கள் மீளவும் பதில் நீதவான் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது மன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ், சசந்திரசேகரம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
பொலிஸாரின் விண்ணப்பங்களுக்கு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளினால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விண்ணப்பங்களை மீளப்பெறுவதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.