வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலையத்திற்கு பயன்படுத்துவதற்காக, கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாக, யாழ் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக தற்போதுள்ள நிலைமையினை பேண முடியும் எனவும் மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் தற்போது யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை கொரோனா தாக்கம் காரணமாக மீளத் திறப்பது சாத்தியமில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடன் நடத்துவதா இல்லையா என தீர்மானிக்கப்போவதாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் குறித்த உற்சவத்தில் கலந்து கொள்ளுவதால் இதற்கான முடிவினை, மத்திய அரசுதான் எடுக்க முடியும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும், மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.