வட அயர்லாந்து எல்லை விவகாரம் நம்பத்தகுந்ததாக இல்லை –தொழிற்கட்சி
In இங்கிலாந்து March 26, 2018 9:54 am GMT 0 Comments 1471 by : Suganthini

பிரெக்சிற்றுக்குப் பின்னர், வட அயர்லாந்துடன் கடினமான எல்லையைத் தவிர்ப்பதாக பிரித்தானிய அரசாங்கம் கூறியபோதும், அது நம்பத்தகுந்ததாக இல்லையென, பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.
லண்டனிலுள்ள ஐ.ரி.வி. தொலைக்காட்சிச் சேவைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போது, தொழிற்கட்சியின் நிழல் பிரெக்சிற் அமைச்சர் கீர் ஸ்ராமர் (KEIR STARMER) இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு அயர்லாந்துடன் கடினமான எல்லை விவகாரம் கடைப்பிடிக்கப்பட மாட்டாதென்ற சட்டத்திருத்தம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும், அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி பிரித்தானியா வெளியேறும் நிலையில், வட அயர்லாந்து எல்லைப் பிரச்சினை பாரிய சிக்கலாகக் காணப்படுகின்றது.
வட அயர்லாந்துடன் கடினமான எல்லை கடைப்பிடிக்கப்படமாட்டாதென, பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுதியளித்துள்ளது. இருப்பினும் இந்த இலக்கை எட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாகவும், அவதானிகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.