வட தமிழகத்தை நோக்கி நகரும் தீவிர புயல் – ஆய்வு மையம் எச்சரிக்கை!

வலுவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுவதுடன் நாளை தீவிர புயலாக மாறி நகரவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் இது குறித்து அவர் கூறியதாவது,
“நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை பெற்றிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது தற்போது வட தமிழக கடற்கரையிலிருந்து சுமார் 1150கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது. இது இன்று மாலைக்குள் புயலாக வலுப்பெற்று நாளை தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும்.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ஏப்.30ஆம் திகதி வட தமிழகம் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும்.
மழையைப் பொறுத்தவரையில் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 30ஆம் திகதி மற்றும் மே 1ஆம் திகதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் இன்றும் நாளையும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், வரும் 29, 30 மற்றும் மே 1ஆம் திகதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.