வட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு இடம்பெற்று வருவதாக தகவல்!

வட மாநிலங்களில், மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
காஷ்மீர், ஒடிஷா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்ரா, தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களிலுள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் அங்குள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில், அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட முன்ஷிபாக் பகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, அவர் மகன் உமர் அப்துல்லா ஆகியோர் வாக்களித்தனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவர் மனைவியுடன் வாக்களித்தார். உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், பதேப்பூர் சிக்ரியில் வாக்களித்தார்.
பல தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது. ஒடிஷாவில் போலங்கிர் மக்களவைத் தொகுதியில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடிகை ஹேமாமாலினி போட்டியிடும் மதுரா தொகுதியில், வாக்குப்பதிவு மையங்களில் அதிகாலை முதலே வாக்காளர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.