வறுமையை போக்கும் அன்னபூரணி விரதம்

அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணியை பூஜை செய்து வழிபட்டு மேலும் பல நன்மைகள் பெறும் முறைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அன்னபூரணி தேவியை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை மாதத்தில் வருகிற வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் ஆகிய தினங்களில் அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வருகிற செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு. பௌர்ணமி, அமாவாசை தினங்களிலும் விரதமிருந்து வழிபடலாம்.
இந்த பூஜையை திருமணமான பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படும். அன்னபூரணி பூஜையை செய்ய விரும்புபவர்கள் தங்கள் வீட்டு பூஜையறையை சுத்தம் செய்து, ஒரு பீடத்தின் மீது வெள்ளை துணியை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய செம்பு அல்லது வெள்ளி கிண்ணத்தில் உயர்தரமான அரிசி தானியங்கள் வைக்க வேண்டும்.
பிறகு அக்கிண்ணத்தில் வைக்கும் அளவிற்கு சிறிய அளவிலான அன்னபூரணி சிலை அல்லது படத்தை அக்கிண்ணத்தில் வைத்து, பின்பு மலர்கள் சமர்ப்பித்து, பழங்கள் மற்றும் இனிப்புகள் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி வைக்க வேண்டும்.
பூஜையை தொடங்கும் முன்பு விநாயகருக்குரிய மந்திரங்கள் ஓதி, பிறகு அன்னபூரணி தேவிக்குரிய மந்திரங்கள், துதிகள் போன்றவற்றை துதித்து, தேவியின் சிலைக்கு ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும்.
இந்த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவேதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு. காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்தும் இப்பூஜையை செய்யலாம்.
அன்னபூரணிக்கு தீபாராதனை காட்டி வழிபட்டு பூஜை முடித்த பிறகு, நைவேத்திய பிரசாதங்களை குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கிய பிறகு விரதம் இருப்பவர்கள் பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.
முடிந்தால் இந்த அன்னபூரணி பூஜை முடித்த பிறகு வசதி குறைந்தவர்களுக்கு அன்ன தானம் செய்யலாம். நாம் உண்ணும் உணவிற்கு கடவுளாக இருப்பவர் அன்னபூரணி என்பதால் மேற்சொன்ன முறைப்படி அன்னபூரணி தேவியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது.
குடும்பத்தில் இருக்கின்ற தரித்திர நிலை முற்றிலும் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் திருமணம் தடை தாமதங்களுக்கு ஆளாகின்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.