வற்றாப்பளை பொங்கல் திருவிழா: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள்
In ஆசிரியர் தெரிவு May 4, 2019 1:04 pm GMT 0 Comments 2720 by : Litharsan
வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் பொங்கல் திருவிழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து திருவிழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரின் உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், முப்படைகளின் தளபதிகள், வட பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, பொதுமக்களின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், வியாபாரிகளுக்கான கட்டுப்பாடுகள், நடைமுறைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
அவ்வகையில், இம்முறை திருவிழாவில் உணவு விற்பனைக் கடைகள், குளிர்களி கடைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய வியாபாரக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோயிலுக்கு வருகைதரும் மக்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் வருகைதர வேண்டும் என்பது உள்ளிட்ட விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து மத வழிபாட்டுத் தலங்களில் இடம்பெறும் திருவிழாக்கள் குறித்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.