வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு முன் பிணை வழங்கியது நீதிமன்று!
In இலங்கை December 9, 2020 9:42 am GMT 0 Comments 1547 by : Dhackshala

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது.
வீதி பெயர் பலகை அகற்றியமை தொடர்பாக தன்னை பொலிஸார் கைது செய்ய முற்படுவதாகவும் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை கடந்த திங்கட்கிழமை தவிசாளர் தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்திருந்தார்.
குறித்த விண்ணப்பத்தினை பரிசீலனைக்காக இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்றம், அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் (புதன்கிழமை) குறித்த விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது அச்சுவேலி பொலிஸாரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
விசாரணைக்காக நீதிமன்றமோ அல்லது அச்சுவேலி பொலிஸாரோ தம் முன்னிலையில் தோன்றுமாறு கோரினால் அங்கு முன்னிலையாக வேண்டும் எனும் நிபந்தனையுடன், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையுடன் நீதிமன்றம் முன் பிணை வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை சீரமைக்கவுள்ளதாக அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.
இவ் வீதியை சீரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப்பெயர்ப்பலகை நடப்பட்டது.
குறித்த பெயர்ப்பலகையை நட அனுமதி பெறப்படாததால் அதனை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
ஒருகடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் பெயர்ப்பலகையை அகற்றாத நிலையில், பிரதேச சபை ஒன்றிற்குச் சொந்தமான வீதியை எக்காரணம் கொண்டும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் சீரமைக்க முடியாது என கூறி அதனை தவிசாளர் அகற்றியிருந்தார்.
குறித்த பெயர் பலகையை அகற்றியது மூலம் அரச சொத்துக்கு சேதம் விளைவித்தார் என வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை தவிசாளரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பொலிஸார் தவிசாளரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்தவேளை, தவிசாளர் பொலிஸார் தன்னை கைது செய்வதனை தவிர்க்கும் முகமாக முன் பிணை விண்ணப்பத்தினை மல்லாகம் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.