வவுனிக்குளம் கோர விபத்து – காணாமல்போன குழந்தை உட்பட மூவரின் சடலங்கள் கண்டெடுப்பு!
In ஆசிரியர் தெரிவு December 20, 2020 2:24 am GMT 0 Comments 1464 by : Rahul
முல்லைத்தீவு, வவுனிக்குளம் குளக்கட்டில் விபத்துக்குள்ளான கப் ரக வாகனத்தில் பயணித்த நிலையில் காணாமல்போன மூவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் காணாமல்போன ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 வயதுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்தும் மேற்கொண்ட தேடுதலில் காணாமல்போன மூவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஒன்று குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது
குறித்த வாகனத்தில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவருடைய பிள்ளைகள் மூவரும் பயணம் செய்துள்ள நிலையில் வாகனம் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்நிலையில், வாகனத்தில் பயணம் செய்த சிறுவன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டெடுத்தனர்.
அத்தோடு காணாமல்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான கப் ரக வாகனத்தில் பயணித்த நிலையில் காணாமல்போன 3 பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயும் நிலையில் அணைக்கட்டு வழியாக கப் ரக வாகனம் பயணித்த வேளையில் அது விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.