வவுனியா ஒருங்கிணைப்பு குழுவிற்கு தெரியாமல் ‘கிபிள்ஓயா’ திட்டத்துக்கு 7ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீடு!
In இலங்கை December 19, 2020 5:22 am GMT 0 Comments 2458 by : Yuganthini
‘கிபிள்ஓயா’ திட்டம் என்ற பெயரில் வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு விவசாய காணிகள் வழங்கப்படவுள்ள விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், ஆளுநர் எம்.சாள்ஸ் மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு. திலீபன் ஆகியோரது இணைத்தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வவுனியா வடக்கில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் கிபிள் ஓயாத்திட்டம் என்ற அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு நீங்கள் அனுமதி கொடுத்துள்ளீர்களா என்று இணைத்தலைவரான ஆளுநரிடம் கேட்டிருந்தார்.
இதன்போது பதிலளித்த ஆளுநர், இல்லை என்று தெரிவித்தநிலையில் குறித்த திட்டத்திற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று மாவட்டசெயலகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த திட்டத்திற்காக வரவுசெலவுத்திட்டத்தில் 7ஆயிரம் மில்லியன் ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும் இந்த திட்டத்தின் அறிக்கையில், வவுனியா மாவட்டத்தில் 2500 ஏக்கர் காடுகளை அழித்து விவசாய நிலங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி கொடுக்காமல் அதனை செய்யமுடியுமா? எனவே ஒருங்கிணைப்பு குழு அனுமதி அழிக்காமல் இதனைசெய்ய கூடாது என்று மத்திய அரசுக்கு அறிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம், இது தொடர்பான திட்ட அறிக்கை எமக்கும் வந்தது. நாம் சில ஆட்சேபனைகளை அனுப்பியிருந்தோம். அந்த திட்டத்தின்படி. 62 அடி உயரத்திற்கு நீரைதேக்கி, நான்கு கிலோமீற்றர் நீளமான அணைக்கட்டும் அமைக்கப்படவுள்ளது. அதன் அணைக்கட்டு மற்றும் நீரேந்து பகுதி வவுனியா மாவட்டத்திலும் பயனாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்நுவர மற்றும் போகஸ்வெவ (சிங்கள குடியேற்றம் செய்த மக்கள்) பகுதிகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.