வாகனத்தை எட்டி உதைத்த பொலிஸார்: பரிதாபமாக கர்ப்பிணி உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்றார்கள் என, குறித்த வாகனத்தை பொலிஸ் அதிகாரியொருவர் எட்டி உதைத்ததில் அதில் பயணித்த கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.
திருச்சியில் நேற்று (புதன்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
வீதியில்சென்ற வாகனங்களை மறித்து பொலிஸார் சோதனை மேற்கொண்டிருந்தவேளையில், அவ்வழியில் வந்த ராஜா-உஷா என்னும் தம்பதியினரை தலைக்கவசம் அணியாதமையினால் பொலிஸார் மறித்துள்ளனர்.
அப்போது அச்சத்தில் ராஜா வாகனத்தை வேகப்படுத்த முற்பட்ட போது பொலிஸ் அதிகாரியொருவர் கால்களால் தடம்போட்டு வீழ்த்தியுள்ளார். இதனால் கீழே வீழ்ந்த உஷா மீது பின்னால் வந்த பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
ராஜா என்னும் குறித்த பெண்ணின் கணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ்அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தை கண்டித்து திருச்சி வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதில் சிலமணிநேரங்கள் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.
உயிரிழந்த பெண் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் பலசிகிச்சைகளின் பின்னர் குழந்தைக்கு தாயாகியிருந்தார் என அவரின் கணவர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ராஜா மற்றும் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.