வாக்கு மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் – மாவட்ட ஆட்சியரை மாற்ற நீதிமன்றம் உத்தரவு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரியொருவர் நுழைந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மற்றும் துணைத் தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், பொலிஸ் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும் எனவும் உதவி பொலிஸ் ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அடுத்தகட்ட விசாரணை வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 18ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.