விகிதாசார முறையிலேயே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் -நஸீர் அஹமட்
In இலங்கை April 18, 2019 8:54 am GMT 0 Comments 2033 by : Dhackshala

விகிதாசார முறையிலேயே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இதுவரை காலமும் நாங்கள் நம்பியிருந்த அரசியல் தலைமைகள் சாதித்தவைகளைப் பற்றி கேள்வி எழுப்பும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
சமூகத்திலுள்ள அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி மக்களுக்குத் துரோகத்தையே செய்து வந்திருக்கின்றார்கள்.
ஒரு புறம் இனவாதம், மறுபுறம் சுயநலம் இந்த இரண்டு வகையான அரசியல் துரோகத்தனங்களில் முஸ்லிம் சமூகம் சிக்கியுள்ளது.
எந்தத் தேர்தலும் எந்த சந்தர்ப்பத்திலும் வரலாம் என்கின்ற தளம்பல் நிலையில்தான் நாடு தற்போது தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அது மாகாண சபைத் தேர்தலாகவோ, நாடாளுமன்றத் தேர்தலாகவோ, ஜனாதிபதித் தேர்தலாகவோ இருக்கலாம். ஆனால் சிறுபான்மை சமூகத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய கலப்பு முறையிலமைந்த மாகாண சபைத் தேர்தலை தடுத்து நிறுத்தி விகிதாசார முறையிலே நடத்தப்பட வேண்டும்.
இதனை எடுத்துக்கூறி, அதில் மாற்றம் செய்விக்க எந்த சிறுபான்மைச் சமூக அரசியல்வாதிக்கும் தகுதியில்லாமல் போய்விட்டது. இது வருத்தமளிக்கிறது” என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.