விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், அளுத்கம – தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை – கங்காவங்கொட பகுதியில் 5 பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். அத்தோடு வரக்காபொலயில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த வேன்ரக வாகனமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் கட்டான – கட்டுவாபிட்டிய பகுதியில் ஆறு பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அங்குருவெல்ல பகுதியில் வீடொன்று சோதனையிடப்பட்ட நிலையில், அங்கிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றும், தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்புக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படும் சந்தேகத்திற்கிடமான பாரவூர்தி மற்றும் வேன் ரக வாகனம் குறித்து தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.