விஜய் மல்லையா விவகாரத்தில் புதிய சர்ச்சை: அருண் ஜெட்லி மறுப்பு

விஜய் மல்லையாவுடனான சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, அவரது கருத்திற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடி குற்றச்சாட்டிற்குள்ளான நிலையில், லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு செல்லும் முன்னர் நிதி அமைச்சரை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) முன்னிலையாகியிருந்த மல்லையா ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அவர் ஆரம்பத்தில் நிதியமைச்சரின் பெயரை குறிப்பிடாத போதிலும், அக்காலப்பகுதியில் அருண் ஜெட்லியே நிதியமைச்சராக இருந்ததனால் புதிய சர்ச்சை கிளம்பியது.
ஆனால், அக்குற்றச்சாட்டை மறுத்த அருண்ஜெட்லி விஜய் மல்லையாவுடன் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்ததாகவும், அதுவொரு உத்தியோகப்பூர்வமற்ற சந்திப்பாக அமைந்திருந்ததாகவும் மல்லையா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
கிங் பிஷர் நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள அவரை நாட்டிற்கு அழைத்துவருவதற்கான முழு முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.