விடுதலையை வலியுறுத்தி மேலும் இரு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
In அனுராதபுரம் September 25, 2018 5:58 am GMT 0 Comments 1556 by : Yuganthini
அநுராதபும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நீண்டகாலமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி, கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் நீடிக்கின்ற நிலையில், இன்று இருவர் தங்களையும் இந்த போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நால்வர், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.தவரூபன், எஸ்.ஜெயசந்திரன், எஸ்.தில்லைராஜ் மற்றும் டி.நிமலன் ஆகியோரே அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தில்லைராஜ் என்ற அரசியல் கைதி வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்தக் கைதிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களின் நிலையை கருத்திற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.