விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பினராயி விஜயன் கண்டனம்!
In இந்தியா January 21, 2021 3:34 am GMT 0 Comments 1351 by : Krushnamoorthy Dushanthini

திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள விமான நிலையங்களை தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்த விரும்புவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
குறித்த குறிப்பில் ‘வர்த்தக ஒப்பந்தம் மூலம் திருவனந்தபுரம், கவுகாத்தி, ஜெய்ப்பூர் விமான நிலையங்களை 2021 ஜனவரி 19ம் திகதியில் இருந்து 180 நாட்களுக்குள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதானி குழுமம் நிர்வகிக்க ஆரம்பிக்கலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கேரள சட்டசபையின் கேள்வி நேரத்தின்போது விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்ட பினராயி விஜயன், விமான நிலைய தனியார்மயமாக்கலை எதிர்த்து விமான நிலைய ஊழியர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாநில அரசுக்கு அளித்த உறுதியை மத்திய அரசு மீறியுள்ளது. விமான நிலையங்களை நிர்வகிக்கும் அனுபவம் சிறிதும் இல்லாத குழுமத்துக்கு விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையங்கள் மேம்படும் என்பது சுத்தப் பொய். தன் அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு சர்வாதிகாரத்தனமாக நடந்து உள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசிடமே வழங்க மத்திய அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.