விம்பிள்டன் டென்னிஸ் தொடர் – வெளியேறினார் பெடரர்

டென்னிஸ் உலகில் 141 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதும், கௌரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், தற்போது லண்டனில் நடைபெற்று வருகின்றது.
இத்தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளைப் பார்க்கலாம்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
மிகவும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்த இப்போட்டியில். சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், உலகின் 8ஆம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவீன் ஆண்டசனை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டை 6-2 என இலகுவாக கைப்பற்றிய பெடரர், இரண்டாவது செட்டை டை பிரேக் வரை கொண்டுச் சென்று 7-6 என கைப்பற்றினார்.
இதனால் மூன்றாவது செட்டை பெடரர், இலகுவாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறிவிடுவார் என இரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணத்தில், கெவீன் ஆண்டசன் மிகவும் அபாரமாக விளையாடி மூன்றாவது செட்டை 7-5 என வெற்றிக் கொண்டார்.
இதனைதொடர்ந்து நடைபெற்ற நான்காவது செட்டிலும் அதே ஆக்ரோஷத்தை தொடர்ந்த கெவீன் ஆண்டசன், அந்த செட்டையும் 6-4 என கைப்பற்றினார்.
இருவரும் தலா இரண்டு செட்டுகளை கைப்பற்றியதால், ஐந்தாவது செட் வெற்றியாளரை தீர்மானிக்கும் செட்டாக அமைந்தது. இந்த செட்டில் இரண்டு வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர்.
இதனை மெய்ப்பிக்கும் வகையில், செட் கணக்கும் நீடித்துக் கொண்டே சென்றது. இறுதியில் கடுமையான போட்டத்தின் மத்தியில் ஆண்டசன், 13-11 என பெடரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மூன்றரை மணி நேரம் நடந்த இப்போட்டியே நடப்பு ஆண்டின், விறுவிறுப்பு மிக்க போட்டியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய கெவீன் ஆண்டசன், அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜோஸ் இஸ்னரை எதிர்த்து விளையாடவுள்ளார்.
மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர்; பிரிவு காலிறுதி போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
இப்போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால், 4ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியின் முதல் செட்டை நடால் போராடி 7-5 என கைப்பற்றினார். இதனையடுத்து இரண்டாவது செட்டில் நடாலை டை பிரேக் வரை இழுத்துச் சென்ற டெல் போட்ரோ, இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டை டெல் போட்ரோ, 6-4 என கைப்பற்றினார். இதனால் நடாலுக்கு நெருக்கடி அதிகரித்தது.
அடுத்த செட்டை இழந்தால் தொடரிலிருந்து வெளியேற வேண்டுமென எண்ணிய நடால், நிதானம் கலந்த ஆக்ரோஷத்துடன் விளையாடி, அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-4, 6-4 என வெற்றிக்கொண்டு அரையிறுதிக்குள் நுழைந்தார். அவர் அரையிறுதி போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிக்கை எதிர்கொள்கிறார்.
இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர்; பிரிவு காலிறுதி போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீரரான ஜோஸ் இஸ்னர், உலகின் 32ஆம் நிலை வீரரான கனேடிய வீரரான மிலோஸ் ராயோனிக்கை தோற்கடித்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இப்போட்டியில், முதல் இரண்டு செட்டுகளும் டை பிரேக் வரை நீடித்தது. இதில் முதல் செட்டை ராயோனிக், 7-6 எனவும், இரண்டாவது செட்டை 10ஆம் நிலை வீரரான ஜோஸ் இஸ்னர், 7-6 எனவும் கைப்பற்றினர்.
இதனைதொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டை 6-4 என ஜோஸ் இஸ்னர், கைப்பற்றினார். இதனால் ராயோனிக், கடும் நெருக்கடிக்குள்ளானார்.
அவரின் நெருக்கடிகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஜோஸ் இஸ்னர், நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதி போட்டியில், ஜோஸ் இஸ்னர், தென்னாபிரிக்காவின் கெவீன் ஆண்டசனுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர்; பிரிவு காலிறுதி போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிக், இலகுவான வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
காலறுதியில் போட்டியில், 28ஆம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்ட 21ஆம் நிலை வீரரான நோவக் ஜோகோவிக், நடைபெற்ற நான்கு செட்டில், ஒரு செட்டை மட்டும் இழந்து இந்த வெற்றியை பதிவுசெய்தார்.
பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியின் முதல் செட்டை ஜோகோவிக், 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை கெய் நிஷிகோரி, 6-3 என கைப்பற்றி ஜோகோவிக்கு பதிலடி கொடுத்தார்.
இதனையடுத்து அபாரமாக விளையாடிய ஜோகோவிக், அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-2, 6-2 என இலகுவாக கைப்பற்றி, அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி போட்டியில் ஜோகோவிக், ஸ்பெயின் ரபேல் நடாலை எதிர்த்து விளையாடவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.