வில்லியம்சன் இட்டை சதம்- டேரில், நிக்கோல்ஸ் சதம்: இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான்!

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 8 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நியூஸிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் அணி 354 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
ஆட்டநேர முடிவில், அபிட் அலி 7 ஓட்டங்களுடனும் மொஹமட் அப்பாஸ் 1 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமிசன் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று முன் தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அசார் அலி 93 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமீசன் 5 விக்கெட்டுகளையும் சவுத்தீ மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 659 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் 238 ஓட்டங்களையும் ஹென்ரி நிக்கோல்ஸ் 157 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயின் ஷா அப்ரிடி, மொஹமட் அப்பாஸ் மற்றும் பஷீம் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
362 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை, பாகிஸ்தான் அணி நாளை தொடரவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.