விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் முறைகேடுகள் – ஜனாதிபதியின் உத்தரவு
In இலங்கை December 29, 2020 2:47 am GMT 0 Comments 1377 by : Dhackshala

விவசாயிகளிடமிருந்து மஞ்சள், சோளம் உள்ளிட்ட அறுவடைகளை கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க தலையிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு விவசாயிகள் மஞ்சள் மற்றும் சோளம் பயிர்ச்செய்கையை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளனர் என்றும் எதிர்வரும் பெரும்போகத்தில் அறுவடையை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது என்பதால், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தகர்கள் மொத்தமாக கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அரசாங்கம் முழுமையாக தலையிட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 மற்றும் 2022 பெரும் போகத்திற்கு உயர்தர விதைகளை சேகரிக்கும் திட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி, மோசடி வர்த்தகர்களால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் தொகையை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
முறைகேடுகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுசாரம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்துவதை முழுமையாக தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுமாறு மதுவரி ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டது.
மஞ்சள், சோளம் மற்றும் கௌப்பி, உளுந்து, பயறு, எள், குரக்கன் போன்ற தானியங்களை மொத்தமாக சேகரிப்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு பதிலாக ஒரு பரந்த சந்தையை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தகர்களை அடையாளம் கண்டு கடன் தொகைக்கு நிகராக பொருட்கள் பற்றிய தகவல்களை பேணுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி அதன் கண்காணிப்பு செயற்பாடுகளை அபிவிருத்தி நிதியுதவியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தாதுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.