வீதி விபத்துக்களில் கடந்த 5 நாட்களில் 42 பேர் உயிரிழப்பு – ருவான் குணசேகர
In இலங்கை April 18, 2019 10:58 am GMT 0 Comments 1915 by : Dhackshala

ஏப்ரல் 13ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில், இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் மொத்தமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
மேலும், இந்தக் காலப்பகுதியில் ஒழுங்கு விதிகளை மீறி வாகனத்தை செலுத்திய சாரதிகளுக்கு எதிராக 42 ஆயிரத்து 114 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஏப்ரல் 13ஆம் திகதிமுதல் ஏப்ரல் 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில், இலங்கையில் 31 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் மொத்தமாக,மஹியங்கனை விபத்தில் உயிரிழந்தவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், குறைவான எண்ணிக்கையாக கருதப்பட்டாலும், இதனையிட்டு நாம் திருப்தியடைய முடியாது. புத்தாண்டு காலங்களிலேயே கூடுதலாக விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
நாம் உரிய அவதானத்துடன் வாகனங்களை செலுத்தினால், இந்த 42 உயிரிழப்புக்களையும் தவிர்த்திருக்கலாம்.
நாம் சாரதிகளுக்கு இதுதொடர்பில் தொடர்ந்தும் அறிவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். விபத்துக்களை குறைக்க பொலிஸாருக்கு சாரதிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
எனவே, உரிய ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துமாறு நாம் சாரதிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.
ஏப்ரல் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மதுபோதையில், வாகனத்தை செலுத்திய 1536 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஒழுங்கு விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய சாரதிகளுக்கு எதிராக இதே காலப்பகுதியில், 42 ஆயிரத்து 114 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கையை எதிர்காலத்தில் குறைப்பதிலேயே எம்மனைவரதும் வெற்றி அடங்கியுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.