வெடிகுண்டு தாக்குதல் குறித்து இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்ததை ஒப்புக்கொண்டார் பிரதமர்
In இலங்கை April 24, 2019 5:27 am GMT 0 Comments 2082 by : Dhackshala

இந்திய உளவுத்துறை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக தகவல்களை அளித்தாகவும் ஆனால் தாங்கள் அதுபற்றி கவனம் இல்லாமல் இருந்து விட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் என்.டி.டி.வி.க்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகத்திற்கு மேலும் தெரிவித்த அவர், “இந்தியா எங்களுக்கு சில உளவுத்துறை தகவல்களை அளித்தது. ஆனால் நாங்களே சற்று கவனம் இல்லாமல் இருந்துவிட்டோம். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உளவுத்துறையுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.
வெளிநாட்டு சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களிடம் நாங்கள் உதவி கேட்டுள்ளோம். கடந்த மாதம் நியூசிலாந்தில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடியாக இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.
தொடர் குண்டுவெடிப்பால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும் இதிலிருந்து இலங்கை மீண்டு வரும். இதேபோன்று எகிப்து, பாலியிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
அந்த நாடுகள் வெகு விரைவில் பழைய நிலைக்கு திரும்பின. இருந்தாலும் எங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கலான விடயமே இங்கு நடந்திருக்கிறது. இதுபோன்ற பல தீவிரவாத தாக்குதல்களையும் போர்களையும் நாங்கள் பார்த்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.