வெளிப்படையாக தீர்மானங்களை எடுக்கும் ஒருவரினாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும்: கோட்டாபய

வெளிப்படையாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைவர் ஒருவரினால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலநறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் இறையான்மை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே மஹிந்த ராஜபக்ஷவின் 9 ஆண்டு கால ஆட்சி காணப்பட்டது.
பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் வன்முறைகள் அற்ற நாட்டில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய சர்வ இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய ஒரு கொள்கை முன்னெடுக்கப்பட்டது.
துறைமுகங்கள் விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் என பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து அனைவரும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் பாரிய யுத்திற்கு முகங்கொடுத்தும் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படாது முன்னோக்கி கொண்டு சென்றோம்.
ஆனால் ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிலையான கொள்ளையோ பொருளாதார இலக்குகளோ அற்ற நிலையில் நாடு படு பாதாளத்தில் விழுந்துள்ளது.
முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டது. நான்கு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு இல்லாமல் போனது.
பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் போன்ற அனைத்து துறைகளிலும் அரசாங்கம் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் உருவாகக் கூடிய அரசாங்கத்தின் ஊடாக வெற்றி இலங்கை அடைவதற்கான கொள்கைகளை தயாரித்து வருகின்றோம்.
தொழில்சார் நிபுணர்கள், புத்தி ஜீவக்ள உள்ளிட்ட பல்துறைசார் நிபுணர்களிடமிருந்து கருத்துக்களை உள்வாங்கி திட்டமிடுகின்றோம். எதிர் தரப்பினரை பழிவாங்கும் நிலையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.
இன்று நாட்டில் பல்வேறு வகையிலும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. போதைப் பொருள் கடத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
வடக்கில் இராணுவம் போரிடும் போது தெற்கில் நகரங்களைப் பாதுகாப்பதில் பொலிஸார் பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். ஆனால் இன்று பல்வேறு வகையிலும் அவர்கள் பழிவாங்கல்களுக்கு உட்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் பொலிஸ்மா அதிபர்கள் நேர்மையாகச் செயற்பட்டனர்.
கட்டுநாயக்கவில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அடுத்து அப்போதைய பொலிஸ்மா அதிபர் 2 வருடங்களுக்கு முன்பதாகவே சேவையிலிருந்து ஓய்வு பெற்றனர். ஆனால் இன்று பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் கோமாளித்தனமாக உள்ளதை ஊடகங்களில் காண முடிகிறது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இவர்கள் கொண்டு வந்த அமைதி என்ன? பாரிய போரை நிறுத்தி மஹிந்த ராஜபக்ச நாட்டில் உருவாக்கிய ஜனநாயத்தையும் சமாதானத்தையும் யாரும் மறந்துவிட முடியாது. நாட்டைக் கையளிக்கும் போது யாருக்கும் அச்சுறுத்தல் இருந்ததில்லை.
சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது. தேசிய பாதுகாப்புக்காக நிறுவப்பட்டிருந்த புலனாய்வு திட்டங்கள் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அனைத்தும் சீரழிந்து விட்டது. புலனாய்வு பிரிவுகளில் எச்சரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.