வெள்ள அனர்த்தத்தில் மட்டக்களப்பு – அனைத்து பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கின

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் மாதுறு ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக இதுவரையில் சுமார் 7,300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 12 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள. இதில் கிரான் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.
மாவடியோடை அணைக்கட்டினை ஊடறுத்து பாய்ந்த வெள்ளம் மற்றும் உறுகாமம் குளம் ஆகியவற்றின் ஊடாக வெளியேறிய மாதுறு ஓயாவின் நீரினால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் 312 குடும்பங்களைச் சேர்ந்த 1,072 பேர் வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயத்திலும், வந்தாறுமூலை மேற்கில் 185 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 53 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் ரெஜி கலாசார மண்டபத்திலும், சந்திவெளி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர் சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலாளர் பிரிவு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவு, ஓட்டமாவடி மத்தி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பகுதிகளில் 9 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில் அவற்றில் 6,287 குடும்பங்களைச் சேர்ந்த 21,104பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்தது.
இடம்பெயர்ந்த நிலையில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் 1,026 குடும்பங்களைச் சேர்ந்த 3,122பேர் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், வெள்ள அனர்த்தம் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் சித்தாண்டி பகுதி ஊடாக வெள்ளம் ஊடறுத்துப் பாய்வதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளமான உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான்கதவுகளும் மூன்று அடி திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக வவுணதீவு பகுதிக்கான போக்குவரத்து சிரமத்தின் மத்தியில் மேற்கொள்ளப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை மற்றும் உன்னிச்சைக் குளத்தினை அண்டியுள்ள காட்டுப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 32அடியை எட்டியுள்ளது.
இந்த நிலையில் குளத்தின் மூன்று வான்கதவுகளும் மூன்று அடி திறக்கப்பட்டுள்ள. இதன்காரணமாக வவுணதீவு உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன், வவுணதீவு பிரதேசத்திற்கு செல்லும் வலையிறவு தாம்போதி ஊடாக ஒரு அடிக்கு மேல் நீர்பாய்வதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுடன் போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று, நவகிரி குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெல்லாவெளி பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் சில பகுதிகளில் மக்களின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, செங்கலடி-பதுளை வீதியில் கோப்பாவெளி பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீதியும் உடைப்பெடுத்துள்ளதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேநேரம், தற்போது மழையுடனான காலநிலை குறைந்து வெள்ள நிலைமையும் ஓரளவு குறைந்துவருகின்ற போதிலும் மாவடியோடை அணைக்கட்டு உடைப்பு மற்றும் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுவரும் நிலையில் பொது அமைப்புகளினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.