வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் : திங்கட் கிழமை விசாரணை!
In இந்தியா January 7, 2021 4:02 am GMT 0 Comments 1347 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது எதிர்வரும் 11 ஆம் திகதி விசாரணைகள் நடைபெறவுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
வேளாண்மையை பொதுப்பட்டியலில் சேர்க்க வகைசெய்த 1954-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவினை விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு மேற்படி அறிவித்துள்ளது.
இதன்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேளாண்மையை பொதுப்பட்டியலில் சேர்க்க வகைசெய்த 1954-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்கு மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத் தலைவர்களுடான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றம் இல்லையா எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு சார்பான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சுமூக தீர்வு எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்துறைத்த நீதிபதிகள், ‘தற்போது நிலவும் சூழலைப் புரிந்துகொண்டிருக்கிறோம். விவசாய சங்கத் தலைவர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கவே விரும்புகிறோம். அட்டார்னி ஜெனரல் தெரிவித்தால் இந்த மனுக்கள் மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
மேலும், வேளாண் சட்டங்களை எதிர்த்து வக்கீல் சர்மா தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.