ஸ்பெயினில் கட்டடமொன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடி விபத்தினால் மூவர் உயிரிழப்பு: ஒருவர் மாயம்!

ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நான்காவது நபரைக் காணவில்லை மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டடத்தின் நான்கு தளங்களை அழித்த இந்த வெடிப்பு சம்பவத்திற்கு எரிவாயு கசிவே காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த மேயர் ஜோஸ் லூயிஸ் மார்டினெஸ் அல்மேடா, ‘கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் தீ பரவியுள்ளது. மட்ரிட்டின் மத்திய புவேர்டா டி டோலிடோ பகுதியில் உள்ள கட்டிடத்தின் பின்புறத்தில் எரிவாயு தொழிலாளர்கள் ஒரு கொதிகலனை பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது, உள்ளூர் நேரம் 15:00 மணிக்கு இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது’ என கூறினார்.
கொதிகலனில் பணிபுரிந்து வந்த மூன்றாவது நபர் காணாமல் போயுள்ள நிலையில், 85 வயது பெண் வழிப்போக்கரும் இரண்டு ஆண்களும் கொல்லப்பட்டனர் என்று ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மேல் தளங்கள் உள்ளூர் ஆயர்களை தங்க வைக்க பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.