ஸ்மித்- வோர்னரின் மீள்வருகை குறித்து மேக்ஸ்வெல் கருத்து!
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் உலகக் கிண்ண தொடரில்; சிறப்பாக விளையாட ஐ.பி.எல். தொடரில் கிடைத்த அனுபவம் உதவும் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
ஓராண்டு தடைக்கு பின்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அணிக்கு மீள் பிரவேசித்தது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் மிகச் சிறந்த ஒரு தொடராக அனைத்து அணிகளுக்குமே அமையும். ஸ்மித்தும், டேவிட் வோர்னரும் ஐ.பி.எல். தொடரில்; விளையாடி விட்டு சமீபத்தில்தான் நாடு திரும்பினர். அவர்கள் அணியில் இணைந்துள்ளனர்.
உலகக் கிண்ண தொடரில் அவர்கள் தங்களது துடுப்பாட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். இதற்கு ஐ.பி.எல். தொடரில் கிடைத்த அனுபவம் அவர்களுக்கு உதவும்’ என கூறினார்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும், துணைத் தலைவராக இருந்த டேவிட் வோர்னர், தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் அவுஸ்ரேலியா ஓராண்டு தடை விதித்தது.
இதனையடுத்து, இருவரும் வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு ரி-20 லீக் தொடர்களில் விளையாடினார். இதன்பிறகு தடை முடிந்தும் அவுஸ்ரேலியா அணிக்கு உள்வாங்கப்படாத இவர்கள், காயத்திற்கு உள்ளாகினர்.
இதன்பிறகு, காயத்தில் இருந்து மீண்ட இவர்கள், இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாட உள்வாங்கப்பட்டனர்.
டேவிட் வோர்னர் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும், ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்கும் விளையாடினர்.
இருவரும் தனக்கு கொடுத்த பணியினை சிறப்பாக செய்து, தற்போது உலகக்கிண்ண தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்துக் கொண்டுள்ளனர்..
டேவிட் வோர்னர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 1 சதம் 8 அரைசதங்கள் அடங்களாக 692 ஓட்டங்களை பெற்று, அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித், நடப்பு ஐ.பி.எல். தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் அடங்களாக 319 ஓட்டங்களை குவித்தார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன
இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.