ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
In இலங்கை January 12, 2018 6:02 am GMT 0 Comments 1889 by : Ravivarman
உள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.
யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில், இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கட்டவேலி 18 ஆம் வட்டார வேட்பாளரான கந்தையா வைத்தியநாதனிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வழங்கி வெளியிட்டு வைத்தார்.
‘ஒன்றிணைந்த கிராம எழுச்சி எமது இனத்தின் வளர்ச்சி’ எனும் கருத்திட்டத்திலான அபிவிருத்தி திட்டத்தினை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.
‘இதுவரை உரிமை கோரப்படாது இருக்கும் காணிகளில் பொதுச் சந்தை, சங்கங்கள் முன்பள்ளிகள் மகிழ் பூங்காக்கள் அமைத்தல், சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கும், சமூக பிறழ்வுகளுக்கும் ஏதுவான கிராம சூழலை இல்லாதொழித்து சமூக நல மாற்று இடங்களை உருவாக்குதல், சபையின் வருமானத்தினை பல்வேறு வழிகளிலும் அதிகரித்து அதன் ஒரு பகுதியை சபையின் அனுமதியுடனும் வருடாந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக, காணாமல் போனோர்களின் குடும்பத்திற்கு உதவுதல் போன்ற விடயங்கள் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் நகரசபை மற்றும் மாநகர சபை வளங்களைப் பயன்படுத்தும் தொழில் வாய்ப்புக்களை அந்தந்த சபை எல்லைக்குள் இருக்கும் படித்த இளைஞர் யுவதிகளுக்கும் துறைசார்அனுபவம் உள்ளவர்களுக்கும் மட்டுமே வாய்ப்பளித்தல், உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு தெளிவூட்டுவதற்காக வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.