ஹொங்கொங்கை மீள முடியாத படுகுழியில் தள்ள வேண்டாம் – நிர்வாக தலைவர் எச்சரிக்கை!
ஹொங்கொங்கில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் மூலமாக நகரம் மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளப்பட்டு விடும் என்று நிர்வாக தலைவர் கேரி லாம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மிகவும் உணர்ச்சிப்பெருக்குடன் இதனை அவர் தெரிவித்தார்.
கைதிகள் பரிமாற்ற திருத்த சட்டமூலத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பாரிய மோதல்களும், வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் வௌிச் செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில், போராட்டம் மூலமாக ஹொங்கொங் மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளப்பட்டு விடும் என நிர்வாக தலைவர் கேரி லாம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘ஹொங்கொங் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் நமது நகரம், குடும்பம் எப்படி இருக்கிறது என்று சிந்தியுங்கள். உங்கள் போராட்டம் மூலம் இந்த நகரத்தை மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளிவிடாதீர்கள். இந்த நகரத்தை படுகுழியில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஹொங்கொங்கை பாதுகாப்பாகவும், சட்டம் மற்றும் ஒழுங்குடன் அமைதியாகவும் வழிநடத்துவதே எனது பணியாகும்’’ என்று கூறினார்.
அதேவேளை, போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான கைதிகள் பரிமாற்ற சட்டதிருத்தத்தை முழுவதுமாக மீளப் பெறுவதற்கான தன்னாட்சி உங்களிடம் இருக்கிறதா?’ என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கேரி லாம் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.