ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய் பிணையில் விடுவிப்பு!

பிராந்தியத்தின் சர்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய், கட்டுப்பாடுகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு பிணை வழங்கக்கோரி ஜிம்மி லாய் ஹொங்கொங் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
விசாரணையின் போது ஜிம்மி லாய்க்கு பிணை வழங்க ஹொங்கொங் அரச தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஹொங்கொங் அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ஜிம்மி லாய்க்கு பிணை வழங்கியது.
அதன் படி பிணை பெறும் ஜிம்மி லாய் அபராதத்தொகையாக 10 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் செலுத்த வேண்டும்.
பிணை மூலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஜிம்மி லாய் தனது வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும், வெளிநாட்டு அதிகாரிகளுடன் எந்த வித ஆலோசனையும் நடத்தக்கூடாது, செய்தி நிறுவனங்களிடம் பேச தடை விதிக்கப்படுகிறது, எந்த வித அறிக்கையும் வெளியிடக்கூடாது, சமூகவலைதளங்களில் எந்த வித கருத்துக்களையும் பதிவிடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் வெளியாகும் ‘அப்பிள் டெய்லி’ நாளிதழின் உரிமையாளரான 73 வயதான ஜிம்மி லாய், ஜனநாயகத்துக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர். இவர் கடந்த ஒகஸ்ட் மாதம் சீனாவின் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு பின்ன பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார், அவரது அலுவலகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் திடீர் சோதனை நடத்தி ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இந்த நிலையில், அவர் கடந்த 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.